78. அருள்மிகு பார்த்தசாரதி கோயில்
மூலவர் வேங்கடகிருஷ்ணன்
உத்ஸவர் பார்த்தசாரதி
தாயார் ருக்மிணி பிராட்டி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் கைரவினி ஸரஸ் தீர்த்தம்
விமானம் ஆனந்த விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
இருப்பிடம் திருவல்லிக்கேணி, தமிழ்நாடு
வழிகாட்டி சென்னை நகருக்குள் அமைந்துள்ளது. சென்னை பாரிமுனையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Triplicane Gopuram Triplicane Moolavarஅல்லி மலர்கள் நிரம்பிய குளத்தை உடைய ஊர் என்பதால் 'திருவல்லிக்கேணி' என்ற பெயர் உண்டானது. ஸுமதி என்னும் அரசன் பிரார்த்தித்துக் கொண்டபடி பெருமாள் வேங்கடகிருஷ்ணனாக இங்கு ஸேவை சாதித்தபடியால் மூலவர் இத்திருநாமம் பெற்றார். பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பீஷ்மர் விட்ட அம்புகளினால் முகத்தில் ஏற்பட்ட வடுக்களுடன் உற்சவர் 'பார்த்தசாரதி' என்னும் திருநாமத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

இந்த கோயிலில் வேங்கடகிருஷ்ணன், ரங்கநாதன், ஸ்ரீராமர், கஜேந்திர வரதர், தெள்ளிய சிங்கர் என்று 5 மூலவர்கள் உள்ளனர். இதுபோல் வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை.

Triplicane Utsavarமூலவர் வேங்கடகிருஷ்ணன், தேர்ப்பாகனாக கோல் மற்றும் சங்கம் கொண்டு, மீசையுடன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். அவருடன் ருக்மிணி பிராட்டி, பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுயம்னன் என்று குடும்ப சகிதமாக தரிசனம் தருகின்றனர். உத்ஸவர் திருநாமம் பார்த்தசாரதி.

இரண்டாவது சன்னதி மூலவர் ரங்கநாதர், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த சன்னதியிலேயே வராஹ மூர்த்தி, நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். தாயாருக்கு வேதவல்லி என்பது திருநாமம்.

மூன்றாவது சன்னதி மூலவர் ஸ்ரீராமபிரான், சீதா, லஷ்மண, சத்ருக்னன், அனுமனுடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

நான்காவது சன்னதி மூலவர் கஜேந்திர வரதர், கருடன் மீது அமர்ந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

ஐந்தாவது சன்னதி மூலவர் தெள்ளிய சிங்கர் என்னும் திருநாமத்துடன் நரசிம்ஹ மூர்த்தி வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

ஐந்து மூலவர் சன்னதி இருப்பதால் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் என்று ஐந்து விமானங்கள் உள்ளன.

அதேபோல் கோயிலில் எதிரே உள்ள புஷ்கரணி 'கைரவினி ஸரஸ்' அல்லது 'அல்லிக்கேணி' என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்திர, ஸோம, மீன, அக்னி, விஷ்ணு என்று ஐந்து தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம்.

ருக்மிணி பிராட்டி, தொண்டைமான், ஸுமதிராஜன், அர்ஜூனன், பிருகு முனிவர், மார்க்கண்டேயன், மதுமான் மஹரிஷி, ஸப்தரோமா, அத்ரி முனிவர், அநிருத்தன், பிரத்யும்னன், பலராமன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசையாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com